Regional01

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் - ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு : சென்னையில் இன்று நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் 1,138 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 83,259 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 5 ஆண்டுகளாக கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதன்காரணமாக ஆசிரியர் -மாணவர் விகிதாச்சாரம் அதிகரித்தது.

இதனால், விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள ஆசிரியர் அல்லது காப்பாளர் பணியிடங்களில் பணிநிரவல் மூலம் நிரப்ப ஆதிதிராவிடர் நல ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உபரி மற்றும் காலி பணியிடங்களின் விவரங்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாகச் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட வாரியாக உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில் இன்று (டிச. 8) காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இயங்கும் நலப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குக் காலை 10 மணி முதலும், மதுரை உள்ளிட்ட 9 மாவட்ட ஆசிரியர்களுக்கு மதியம் 2.30 மணி முதலும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT