சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுவாமி சகஜானந்தா அரசினர் தொழில் பயிற்சி நிலையம் உள்ளது. இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் நேற்று காலை ஒன்று திரண்டு வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்றனர்.
தொழிற் பயிற்சி நிலையத்தில் குடி தண்ணீர் இல்லை, கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சிதம்பரம்- சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் பெரியசாமி மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதன் பிறகு மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்கு சென்றனர்.