புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில்,‘ மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியில் வாழும் தமிழர் ஆணையரகம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக வழங்கும் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 12-ம் தேதி `புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக' கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி 12, 13-ம் தேதிகளில் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் விழா, `தமிழால் இணைவோம்' என்ற பெயரில் சென்னையில் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தங்கள் விவரங்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த இணையதளம் மூலம் புலம் பெயர் தமிழர்களுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளலாம்.
தற்போது ஒமைக்ரான் தொற்று மற்ற நாடுகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையில், வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகம் திரும்ப விரும்பினால் அவர்களுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யும். வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க, அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 12-ம் தேதி நடைபெறும் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் விழாவில், புலம்பெயர்ந்த தமிழரிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை, இலக்கியம், வரலாறு போன்ற தகவல்கள் வெளியிடுவதுடன் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
வெளிநாடுகளில் வசிப்போர் தாங்கள் பிறந்த கிராமத்தின் மேம்பாட்டுக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், அவர்கள் பெயரிலேயே அந்த நலத்திட்டங்கள் செய்யப்படும். வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட பணிக்காக செல்வோர், அங்கு வேறு பணிகளில் அமர்த்தப்படும் நிலை உள்ளது. எனவே, அவர்கள் பணி தொடர்பாக தமிழக அரசிடம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாடு செல்ல விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.