Regional02

எரிபொருள் பரிசோதனைக்காக அமைக்கப்பட்ட - ஆழ்துளை கிணறை மூட ஆய்வு செய்த ஓஎன்ஜிசி அலுவலர்கள் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம் பக்குடி அருகே வாணக்கன் காட்டில் எரிபொருள் பரிசோதனைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறை மூடுவதற்காக ஓஎன்ஜிசி அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி வட்டங்களில் வாணக்கன்காடு உட்பட மொத்தம் 7 இடங்களில் எரிபொருள் சோதனைக்காக ஓஎன்ஜிசி சார்பில் தலா சுமார் 9 ஆயிரம் அடி ஆழத்துக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால், எந்த இடத்தில் இருந்தும் எரிபொருள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூடிவிட்டு, உரிய விவசாயிகளிடமே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, வாணக்கன்காட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு குழாயில் இருந்து எண்ணெய் கொப்பளித்து வெளியேறியதையடுத்து, உடனடியாக அடைத்து சரிசெய்யப்பட்டது. இந்த ஆழ்துளை கிணறை பாதுகாப்பாக மூடி, நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைப்பதற்காக ஓஎன்ஜிசி பொறியாளர் அருண்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். விரைவில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு ஆழ்துளை கிணறு மூடும் பணி தொடங்கவிருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT