குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.40 லட்சம் மதிப்பில், 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்நோக்கு பயன்பாட்டு வாகனங்கள்
இவ்வாகனத்தின் நான்குபுறமும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை காணவும், அதனைப் பதிவு செய்யவும், தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு பணியிலும் இந்த வாகனத்தை பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி, சூழ்நிலைக்கு ஏற்ப அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளுக்கும் அவசர காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் வகையிலும்வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பணிகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில், ஒரு வாகனம் சென்னை பெருநகர காவல் ஆணையர், மற்றொரு வாகனம் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கட்டுப்பாட்டிலும் செயல்படும்.
இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி செ.சைலேந்திரபாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் தொடங்கி வைக்கப்பட் டுள்ள இந்த வாகனம், நேற்று காலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நிறுத்தப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.