இந்தியா, ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த மாநாட்டின்போது ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத் தானது.
இந்தியா, ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்த ஆண்டுதோறும் இரு நாடுகளின் உச்சி மாநாடு நடத் தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு உச்சி மாநாடு நடக்கவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதி பர் விளாடிமிர் புதின் நேற்று மாலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் நேரடியாக ஹைதராபாத் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்போது பிரதமர் மோடி பேசியதாவது:
ரஷ்ய அதிபர் புதின், இந்தியா மீது அதிக அன்பு வைத்துள்ளார். இதன்காரணமாகவே கரோனா பரவல் அச்சுறுத்தலிலும் அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். இதன்மூலம் இந்திய, ரஷ்ய உறவு மேலும் வலுவடைந்துள் ளது. இரு நாட்டு உறவு தனித்துவ மானது. உண்மையான நட்பின் இலக் கணம் ஆகும்.
இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) திட்டத்துக்கு ரஷ்யா உறுதுணையாக உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இரு நாட்டு பாதுகாப்பு, பொருளாதார உறவு விரிவடைந்து வருகிறது. கரோனா பரவல் தடுப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது:
துரதிஷ்டவசமாக கடந்த ஆண்டு இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு நடக்கவில்லை. இந்த ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரஷ்யாவின் நம்பகமான, நீண்டகால நட்பு நாடு இந்தியா. கடந்த ஆண்டு இரு நாட்டு வர்த்தகம் 17 சதவீதம் அளவுக்கு சரிந்தது. எனினும், இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் இருதரப்பு வர்த்தகம் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய, ரஷ்ய பாதுகாப்பு உறவு வலுவானது. எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.5 ஆயிரம் கோடி ஒப்பந்தம்
இதேபோல, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஸ்புட்னிக் லைட் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது ஒரு தவணை கரோனா தடுப்பூசியாகும்.
இதுகுறித்து ரஷ்ய அமைச்சர் செர்கே லாவ்ரோ கூறும்போது, ‘‘ஸ்புட்னிக் லைட் ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஓராண்டில் 10 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.
எஸ்-400 ஏவுகணை
எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யா விடம் இருந்து வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. அதை மீறி ஏவுகணைகள் வாங்கப்படுகின்றன. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கூறும்போது, ‘‘இந்தியா இறையாண்மையுள்ள நாடு. யாரிடம் ஆயுதங்களை வாங்குவது என்பதை இந்தியா திடமனதுடன் முடிவு செய்கிறது’’ என்றார்.