தேமுதிக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
கட்சியின் வளர்ச்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்குரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம்வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணைபிரச்சினையில் கேரள அரசுக்குதமிழக அரசு விட்டுக் கொடுக்காமல் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். கனமழையால் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள நீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.