வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணலி புதுநகர், வடிவுடையம்மன் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளை நேற்று ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர். 
Regional01

கனமழையால் பாதிக்கப்பட்ட - மணலி புதுநகரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு : வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதி

செய்திப்பிரிவு

சென்னையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த நவ.7-ம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியதுடன், சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த நவ.20-ம் தேதி கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகரில் வெள்ளத்தால் சூழப்பட்ட குடியிருப்பு பகுதிகளை முதல்வர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அங்கு தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு, நிவாரணப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை நேரில் பார்வையிட்டார்.

அப்போது, சீரமைப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அப்பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

பின்னர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள வெள்ளிவாயல் ஊராட்சியில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியை முதல்வர் பார்வையிட்டார். ஆற்றில் இருந்து உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எம்எல்ஏக்கள் எஸ்.சுதர்சனம், துரை சந்திரசேகர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT