விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் மற்றும் மரக்காணத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளை உள்ளடக்கி கழுவேலி பறவைகள் சரணாலயம் உருவாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், வானூர் மற்றும் மரக்காணம் வட்டங்களில் 5,151.60 ஹெக்டேர் பகுதியில் உள்ள கழுவேலி சதுப்பு நிலப்பகுதியை கழுவேலி பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த பரிந்துரையை கவனத்துடன் பரிசீலித்த தமிழக அரசு, வானூர், மரக்காணம் வட்டங்களில் குறிப்பிட்ட 5,151.60 ஹெக்டேர் நிலத்தை வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கழுவேலி கழிமுகப்பகுதியில் மரக்காணத்துக்கு உட்பட்ட நடுக்குப்பம், செய்யான்குப்பம், செட்டிக்குப்பம், அனுமந்தை, ஊரணி, கீழ்ப்புத்துப்பட்டு, கூனிமேடு, திருக்கனூர் கிராமங்கள், வானூர் வட்டத்தில், கிளப்பாக்கம், கொளுவரி, கழுப்பெரும்பாக்கம், காரட்டை, தேவநந்தல் கிராமங்களில் உள்ள பகுதிகள் இதில் அடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.