Regional01

கரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தடுப்பூசியின் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில இதுவரை 13 கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இதில், மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 542 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை முதல் மற்றும் 2-ம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தடுப்பூசி செலுத்தாதவர்கள் ரேஷன் கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், தேநீர் கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், துணிக்கடைகள், கடைவீதி, ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையம், அரசு மற்றும் தனியார் அலுவலகம், மருத்துவமனைகளுக்குச் செல்ல தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT