தடாகம் பகுதியில் தடையை மீறி இயங்கிவந்த 4 செங்கல்சூளைகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டுவந்த செங்கள் சூளைகளுக்கு கடந்த மார்ச் மாதம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தடை ஆணை பிறப்பித்தார். இந்நிலையில், தடையை மீறி செங்கல் சூளைகளில் இருந்து நள்ளிரவு நேரத்தில் செங்கற்களை லாரியில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்வதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நள்ளிரவில் செயல்படும் செங்கல்சூளைகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோ.ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குநர், கோவை வடக்கு வட்டாட்சியர், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர், தடாகம் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக கோட்டாட்சியர் கோ.ரவிச்சந்திரன் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவுப்படி எந்த செங்கல்சூளையும் செயல்படக்கூடாது. உபகரணங்கள், பொருட்கள், செங்கற்களை வெளியே எடுத்துச்செல்லக்கூடாது என்று செங்கல்சூளை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது” என்றார். இந்நிலையில், வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட காளையூர் மற்றும் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளப்பநாயக்கன்பாளையத்தில் தடையை மீறி இயங்கி வந்த 4 செங்கல்சூளைகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் நேற்று துண்டித்தனர்.