CalendarPg

தமிழகத்தில் நீர்நிலை பாதுகாப்புக்கு - அரசு எடுத்த நடவடிக்கை என்ன? : அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்யுமாறு தலைமைச் செயலருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

‘சென்னை மாதவரம் அடுத்த புத்தகரம் தாங்கல் ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள், ஏரி பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் மூலம் போலிஆவணங்கள் தயாரித்து, அப்பகுதிநீர்நிலைகள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது அங்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சென்னைகுடிநீர் வாரியமும் ஆக்கிரமித்துகழிவு நீரேற்று நிலையம் அமைத்து,ஏரியில் கழிவுநீரை கலந்து வருகிறது. அங்கு குப்பைகளும் கொட்டப்படுகின்றன’ என்று நாளிதழ் ஒன்றில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில், தேசியபசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஏரி பகுதியை ஆக்கிரமித்தது, குப்பை கொட்டியது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட அதிகாரி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர், சென்னை குடிநீர் வாரியம்,மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கொண்ட கூட்டுக் குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. ஆனாலும், ஏரி ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அமர்வில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் முன்புஇந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

புத்தகரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2022ஜன.7-ம் தேதி நடக்கும். அதற்குள், புத்தகரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும்,தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மாசு, ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT