அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என மறுப்புதெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.7-க்கு தள்ளிவைத்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவி்ல் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமனுவில், ‘‘டிச.1-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலமாக இனி தேர்ந்தெடுக்கப்படுவர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அதிமுகவில் ஒற்றைத்தலைமை இருக்க வேண்டும் என்ற கட்சியின்நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்துக்கு விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்கட்சி தேர்தலை நடத்த 21 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றவிதி மீறப்பட்டுள்ளது. சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொதுச் செயலாளரின் பதவி மற்றும் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்துவரும் ஓ.பன்னீர்செல்வமும், கே.பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுகவில் கட்சி உறுப்பினர்கள் முறைப்படுத்தப்படவில்லை. உறுப்பினர் அட்டைவழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. உள்கட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை. எனவேஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, தேர்தல்நடைபெறும் 21 நாட்களுக்கு முன்பாக முறையாக அறிவிப்பு வெளியிட்டு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
மேலும் தன்னை கடந்த 2018 பிப்ரவரியில்கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, 2018 ஏப்ரலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.பழனிசாமி ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்பதால் தன்னை கட்சியில் இருந்து இவர்கள் நீக்கி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்ற அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பாக நேற்று நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.பழனிசாமி, அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், பி.எச்.அரவிந்த் பாண்டியன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் கடந்த 2018-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. 3 ஆண்டுகளாக அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும்இல்லை. இந்த சூழலில் அவர் எப்படி இந்த வழக்கைத் தொடர முடியும், என கேள்வி எழுப்பினர். பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உரிமையியல் வழக்கு தொடர்ந்து தீர்வு கண்ட பின்னர் அவர் வழக்குதொடரட்டும். எனவே மனுதாரர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுஅல்ல என்றும், இதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் தேவை எனவும் கோரினர்.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, மனுதாரரை கட்சியில் இருந்து நீக்கிய 2 மாதங்கள் கழித்தபிறகே ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதனால் மனுதாரரை நீக்கியதுசெல்லாது என்பதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது விதிகளை மீறி உள்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் மனுதாரருடன் மேலும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைய தயாராக உள்ளனர். எதிர்தரப்பில் பதிலளிக்க அதிக காலஅவகாசம் அளிக்கக்கூடாது. அதுவரை இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முயன்ற தன்னைவெளியேற்றி துரத்தியதாகவும், 5 நாட்களில்இந்த தேர்தலை நடத்தி முடிக்க தி்ட்டமிட்டுள்ளதாகவும் பிரசாத் சிங் என்பவர் நேரில் ஆஜராகி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கு தொடராதவர்கள் வாதிட முடியாது. எதிர்தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் கோராமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். பின்னர் எதிர் தரப்பு விளக்கம் அளித்த பிறகுஇந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இந்த நீதிமன்றம்தயங்காது.
அதேபோல், தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை சட்ட விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தால், தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்படும் எனக்கூறி, இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி, தேர்தல் அதிகாரிகளான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.7-க்கு தள்ளி வைத்துள்ளார்.