Regional02

மருந்தக ஊழியரிடம் ரூ.1.50 லட்சம் வழிப்பறி - சிறையில் உள்ள 2 பேரை காவலில் எடுக்க போலீஸார் முடிவு :

செய்திப்பிரிவு

திருப்பூரில் மருந்தக ஊழியரை வெட்டி, ரூ.1.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், சிறையில் உள்ள இருவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் சேதுபதி (45). வஞ்சிபாளையம் பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் சங்கர் (42) என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 18-ம் தேதி இரவு 11 மணிக்கு, மருந்தகத்தை பூட்டிவிட்டு, கடையில் இருந்த ரூ. 1.50 லட்சத்தை எடுத்துக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் இருவரும் வீட்டுக்கு கிளம்பினர். இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், இடுவம்பாளையம் பகுதியில் இருவரையும் வழிமறித்தனர்.

பின், அரிவாளால், சங்கரை வெட்டி விட்டு, ரூ.1.50 லட்சம் மற்றும் 2 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பினர். படுகாயமடைந்த சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக திருப்பூர் வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், முருகம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் அவரது நண்பர் சிறுபூலுவபட்டியை சேர்ந்த இசக்கிபாண்டி (25) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது, தெரியவந்தது. இவர்களை பிடிக்க போலீஸார் சென்றபோது, இருவரும் மற்றொரு வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டது, சிறையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் காவலில் எடுத்து வீரபாண்டி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT