கமுதி அருகே விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் 100 ஏக்கர் மிளகாய் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
கமுதி அருகேயுள்ள கீழவலசை மலட்டாறு தடுப்பணைக்கு வரும் மழைநீர் மதகு மூலம் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களை நிரப்பிய பிறகு மீதமுள்ள தண்ணீர் சாயல்குடி வழியாகக் கடலில் கலக்கிறது. இந்நிலையில் கீழவலசை தடுப் பணையில் இருந்து பிரிந்து செல்லும் மாவிலங்கை வரத்து கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் கீழ வலசையிலிருந்து செல்லும் தண்ணீர் இடையங்குளம், கீழவலசை, புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதில் 100 ஏக்கர் மிளகாய் பயிர் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்து உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கமுதி தோட்டக்கலைத் துறை அதி காரிகளிடம் கோரிக்கை விடுத் துள்ளனர்.