Regional03

ஓய்வு தலைமை ஆசிரியரை தாக்கிய பெண் காவல் ஆய்வாளருக்கு அபராதம் :

செய்திப்பிரிவு

மதுரை கூடல் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் நாராயணசாமி. இவர் கூடல்புதூரில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்த ஷகீலா மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், கூடல்புதூர் சார்பு ஆய்வாளர் ஷகீலா (தற்போது சென்னையில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிகிறார்) மற்றும் போலீஸார் 11-1-2007-ல் என்னுடைய வீட்டின் முன் கொட்டப்பட்டிருந்த மணலை அப்புறப்படுத்துமாறு கூறினர். பின்னர் என்னையும், மகனையும் தாக்கினர். இதனால் ஷகீலா மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், தன் மீதான கு்ற்றச்சாட்டுகளை ரத்து செய்து விடுவிக்கக் கோரி, காவல் ஆய்வாளர் ஷகீலா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதித்துறை நடுவர் சுந்தர காமேஷ் மார்த்தாண்டன் விசாரித்தார். பின்னர், மனுதாரர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டாலும் அவரது நடவடிக்கை ஏற்புடையதல்ல. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை நாராயணசாமிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT