Regional01

அரசு மாணவியர் விடுதியில் ராகிங் சேலம் ஆட்சியரிடம் புகார் :

செய்திப்பிரிவு

சேலத்தில் அரசு கல்லூரி விடுதியில் ராகிங் செய்த சீனியர் மாணவிகள் மீது முதலாமாண்டு மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சேலம் சங்கர் நகரில் அரசு கல்லூரி மாணவிகளுக்கான தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை தனித்தனியே தங்கியுள்ளனர். அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் மாணவிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பெற்றோருடன் வந்தனர். அவர்கள் ஆட்சியர் கார்மேகத்தை சந்தித்து, மூத்த மாணவிகள் சிலர் ராகிங் செயலில் ஈடுபடுவதாகவும், அதனை தடுத்து நிறுத்திட வேண்டும்,’ என புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் சங்கர் நகரில் உள்ள அரசு விடுதியில் இரவு நேரத்தில் நாங்கள் தங்கியுள்ள அறை கதவுகளை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிகள் தட்டி, இரவில் தூங்க விடாமலும், வெகு நேரம் நிற்க வைத்தும் ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கி, மன உளைச்சல் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, விடுதியில் நடக்கும் ராகிங் கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தி, தடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT