தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மகளிருக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீட்டு வழங்கிய பின்னர் நடைபெறும் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலாக இது உள்ளது. மாநகராட்சிகளில், கவுன்சிலர்களைக் கொண்டு கல்வி, நிதி, சுகாதாரம் உள்ளிட்ட நிலைக் குழுக்கள் அமைக்கப்படும்.
இந்நிலையில் இந்த நிலைக் குழுக்களில் 50 சதவீதத்துக்கு குறையாமல் பெண் கவுன்சிலர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், தமிழ்நாடு மாநகராட்சி நிலைக் குழுக்களை அமைப்பதற்கான விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.
அது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்த உத்தரவு தற்போது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநகராட்சி நிலைக்குழுக்களிலும், வெற்றிபெற்ற மாநகராட்சி பெண் கவுன்சிலர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.