நெய்வேலி அடுத்த மேலக்குப்பத்தை சேர்ந்த ராமாணிக்கம் மனைவி கமலம்( 62) . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டவுன்ஷீப் வட்டம்- 28-ல் உள்ள சூப்பர் பஜாருக்கு சென்றார். அங்குள்ள மெக்கானிக் கடை அருகே அவரை செடுத்தான்குப்பத்தைச் சேர்ந்த அரசு என்ற ராஜ்குமார்(26) வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. ஆயிரத்தை வழிப்பறி செய்தார். இதுகுறித்து கமலம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜ்குமார் மீது நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ரவுடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கொலை, கொலை முயற்சி, வழக்குகள் உள்பட 14 வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செய்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் குண்டர் தடுப்பு சட்டத்தில் ராஜ்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து கடலூர் மத்திய சிறையில் உள்ள ராஜ்குமாரிடம் நேற்று முன்தினம் உத்தரவு நகலை போலீஸார் வழங்கினர்.