ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்திய திருநாவுக் கரசின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் உள்ளிட்ட அதிகாரிகள். படம்:எல்.பாலச்சந்தர் 
Regional02

நயினார்கோவில் அருகே வயலில் விவசாயி மர்ம மரணம் - ராமநாதபுரத்தில் உறவினர்கள் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

நயினார்கோவில் அருகே வயல்வெளியில் காயங்களோடு இறந்து கிடந்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகேயுள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (46). இவருக்கு மனைவி பூங்கொடி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். திருநாவுக்கரசு விவசாயம் செய்து வருவதோடு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் திறந்துவிடும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு உரமிடுவதற்காகச் சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது, வயல் வெளியில் உடலில் காயங்களுடன் திருநாவுக்கரசு இறந்து கிடந்தார்.

நயினார்கோவில் போலீஸார், திருநாவுக்கரசின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் திருநாவுக்கரசின் உறவினர்கள் நேற்று திரண்டனர். பின்னர், அவரது உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநாவுக்கரசின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அவர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், டிஎஸ்பி ராஜா, வட்டாட்சியர் ரவிச் சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT