திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் கொத்துக்காடு தோட்டத்தில் செயல்பட்டு வந்த சாய ஆலையில்,கடந்த 14-ம் தேதி இரண்டு கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது, 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லியில் இருந்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் திருப்பூருக்கு நேற்று வந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த இக்குழுவினர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்புடைய சாய ஆலையில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களில் 2 பேர், ஆதிதிராவிடர்வகுப்பை சேர்ந்தவர்கள். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும்,போலீஸாரும் உரிய நடவடிக்கையை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுவழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 3 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். அவர்களது குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும்.
அரசாங்க வேலை, குடியிருப்பும் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். கழிவுநீர் தொட்டிகளில் இறங்குவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களிடம் உரிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். சாய ஆலைஉரிமையாளர்கள், இயந்திரங்களைக்கொண்டு கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக, மனிதர்களை பயன்படுத்தினால் சாய ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்பாடி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.