Regional02

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம்: 4 வாரங்களில் இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகா பென்னலூர் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பாதையையும், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பெரும்புதூர் வட்டாட்சியர் தாக்கல்செய்திருந்த பதில் மனுவில், “தேவாலயம் கட்ட எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும், பாதையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்படவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆட்சேபம் வரவில்லை என்பதற்காக அரசு நிலங்களை ஆக்கிரமிக்க அதிகாரிகளே துணை போகலாமா என கேள்வி எழுப்பி, “ஆக்கிரமிப்புகளில் இருந்து அரசுநிலங்களை பாதுகாக்க அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினார்.

பின்னர், தேவாலயம் கட்ட உரிய கட்டிட அனுமதியும், ஆட்சியரின் ஒப்புதலும் அவசியம் என தெரிவித்துள்ள நீதிபதி, “இந்த தேவாலயம் எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்டுள்ளதால் அதை 4 வாரங்களில் இடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். மேலும், உண்மைத் தகவல்களை மறைக்கும் வகையில் எந்த விவரங்களும் இல்லாமல் பதில்மனு தாக்கல் செய்துள்ள வட்டாட்சியர் மீது உரியவிசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT