Regional02

ஐஎன்டியுசி ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

திருவாரூர் மண்டலத்தில் செயல்பட்டு வரும் நெல்கொள்முதல் நிலையங்களில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, ஐஎன்டியுசி சார்பிலான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில், மன்னார்குடியில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் பாண்டியன், அமைப்புச் செயலாளர் பா.ராஜீவ்காந்தி, மண்டலத் தலைவர் வி.அம்பிகாபதி, பொருளாளர் வை.சங்கரநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், திருவாரூர் மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் பாதிக்கப்பட்டு, மாதக்கணக்கில் தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக போர்க்கால அடிப்படையில் இயக்கம் செய்ய வேண்டும். தற்போதுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் பெயரை இனி கொள்முதல் மற்றும் சேமிப்பு நிலையங்களாக அறிவித்து, நெல் மூட்டைகளின் இருப்பு காலத்துக்கு இழப்பு குறியீடு வழங்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இயற்கையாக மழை மற்றும் வெயிலின் காரணமாக ஏற்படுகின்ற எடை இழப்புக்கு கொள்முதல் பணியாளர்களிடம் எவ்வித எழுத்துப்பூர்வ விளக்கமும் கோராமல், தன்னிச்சையாக விதிக்கு முரணாக இயக்க இழப்புத் தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும்.

கொள்முதல் பணியாளர்களுக்கு 2018-ம் ஆண்டு முதல் நிலுவையிலுள்ள செலவீனங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT