ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றி யோருக்கான சிறப்புப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் ராணிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசும்போது, "ராணிப்பேட்டையில் உள்ள விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றி யோருக்கான சிறப்புப்பள்ளி மேலும் 5 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறுவார்கள்.
இங்கு நடைபெறும் சிறப்பு முகாமில் கை, கால் இயக்க குறைபாடுடையோர் 66 நபர்கள், காதுகேளாத, வாய் பேச முடியாத 54 நபர்கள், கண் பார்வையற்றவர் கள் 14 நபர்கள், அறிவுசார் குறைபாடுடையோர் 74 நபர்கள் என மொத்தம் 208 நபர்களுக்கு விலையில்லா உபகரணங்களாக மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோள்கள், நடைவண்டி, சி.பி.சேர், கார்னர்சேர், வாக்கர், காதொலிக்கருவி, மனவளர்ச்சிக் குன்றியவர் களுக்கான பாடப்புத்தகம், பார்வையற்றோர்களுக்கு மடக்கு குச்சிகள், டேப்லெட், பிரெய்லிகிட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.
நிகழ்ச்சியில், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி, மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், விஷ்வாஸ் சிறப்புப்பள்ளி தாளாளர் கமலாகாந்தி, செயலாளர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, ராணிப் பேட்டை மாவட்டத்தில் கனமழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார். இதில், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் இருளர் காலனியில் வசிக்கும் 18 இருளர் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இதையடுத்து, நெமிலி வட்டம், ரெட்டிவலம் ஊராட்சியைச் சேர்ந்த குமார் என்பவரின் கோழி பண்ணையில் மழையால் 5,600 கோழிகள் நேற்று முன்தினம் உயிரிழந்தன. அங்கு அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டு கோழி பண்ணை உரிமையாளர் குமாருக்கு நிவாரண உதவித் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும், அரக்கோணம் வட்டம் கணபதிபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள முகாமில் தங்கியுள்ள மக்களுக்கும், நெமிலி வட்டம் மேலபுலம் ஊராட்சியில் வீடு இழந்து முகாம்களில் தங்கியுள்ள 45 இருளர் குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கி ஆறுதல் கூறினார்.