ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில்ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்நிறுவனம் ஒடிசா அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் குர்பதஹலி நல்லா நீர் வழித்தடத்தில் மண்ணைக் கொண்டு நிரப்பி, அதன் மீது தொழிற்சாலை வளாகத்தைக் கட்டியுள்ளது. இதனால் அதன் இயற்கையான நீர் வழித்தடம் பாராங் சிறு நீர்ப்பாசனத் திட்டத்தில் இணையும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்டாக்கைச் சேர்ந்த அலேகா சந்திர திரிபாதி என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்தார்.இந்தப் புகாரை விசாரித்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் ஜிண்டால் நிறுவனம்நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து தொழிற்சாலை கட்டியிருப்பதும் இதனால் நீர் வழிப் பாதை மாற்றப்பட்டுள்ளதும் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜிண்டால் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2 கோடி அபராதம் விதித்தது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.