தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரூ.15 கோடியே 97 லட்சத்து 47 ஆயிரத்து 900 வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. உயிர் இழப்புகளும், உடமை சேதங்களும், பயிர் சேதங்களும் அதிகமாக உள்ளன. பயிர் இழப்புகளை ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக மத்திய குழு தமிழகம் வந்தது. முதல்வரும், அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் குழு பயிர் சேதங்களை ஆய்வு செய்து மதிப்பிட்டு அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
இந்நிலையில், அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அக்.25-ம் தேதி முதல் நவ.28 வரை பொதுமக்களுக்கு ரூ.15 கோடியே 97 லட்சத்து 47 ஆயிரத்து 900 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. 59 மனித உயிரிழப்புகளுக்கு ரூ.2.36 கோடியும், 2,943 கால்நடைகள் இழப்புக்கு ரூ.3 கோடியே 43 லட்சத்து 71 ஆயிரமும், காயமடைந்த 13 நபர்களுக்கு ரூ.55 ஆயிரத்து 900-மும், சேதமடைந்த 24,810 குடிசைகளுக்கு ரூ.10 கோடியே 17 லட்சத்து 21 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.