திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே உள்ள கோவன்குளத்தைச் சேர்ந்த பேச்சித்துரை என்பவரது மகன் மாரி (24), கூலித் தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் மூன்றடைப்பில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு ஊசி போட்டதில் சில நாட்களில் வீக்கம் ஏற்பட்டு, புண் உருவாகியுள்ளது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், மூன்றடைப்பு கிளினிக்கில் தவறான சிகிச்சை அளித்ததால் மாரி இறந்ததாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில், ஊசி போட்ட சித்த மருத்துவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் தேனியைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.