தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போது, நீட் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அப்போது உடன் இருந்தார். 
FrontPg

நீட் மசோதாவை குடியரசுத் தலைவரின் : ஒப்புதலுக்கு உடனே அனுப்ப வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு நீட்தேர்வு முறை பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்கும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கும் நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரைகள் அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார்.

நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளை இக்குழு கேட்டறிந்தது. மாணவர்கள் சேர்க்கை குறித்த தகவல்களை ஆய்வு செய்தது. அத்துடன், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்ற, மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.

இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படை யில், சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு’ கடந்த செப்.13-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்போது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவாக பெறும் வகையில், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண் டும் என்று ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், துறையின் சிறப்பு பணி அலுவலர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மசோதா விவரம்

‘எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் உள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பட்டியலின பழங்குடியினர், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எம்பிபிஎஸ் மாணவர்களின் தகுதி அல்லது தரத்தை நீட் தேர்வு உறுதிசெய்வதாக தெரியவில்லை. எனவே, 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை சட்டம் போன்ற சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம்’ என்று குழு பரிந்துரைத்தது.

இதையடுத்து, குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் அரசு செயலர்கள் கொண்ட குழு கடந்த ஜூலை 15-ம் தேதி அமைக்கப்பட்டது. அந்த குழு, ‘மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நீட் தேர்வை விலக்குவதற்கான காரணத்தை குறிப்பிட்டு, புதிய சட்டம் இயற்றி, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்’ என்று தெரிவித்தது.

இதையடுத்து, பேரவையில் கடந்த செப்.13-ம் தேதி சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ‘‘பள்ளித் தேர்வு மதிப்பெண்களை நெறிமுறைப்படுத்தும் முறை மூலம் சரிசெய்தால், அது முறையான, நியாயமான, நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். இந்திய அரசியலமைப்பின்படி, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை மாநில அரசே முறைப்படுத்த முடியும். எனவே, இந்த சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படுகிறது.

மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது’’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மழை குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT