Regional02

பல்லடம் சார் நிலை கருவூலத்தில் கொள்ளை முயற்சி : திட்டம் தீட்டிய காவலர் தலைமறைவு

செய்திப்பிரிவு

பல்லடம் சார் நிலை கருவூலத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மங்கலம் காவல் நிலைய காவலரை, போலீஸார் தேடி வருகின்றனர். அவரை, பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள சார் நிலை கருவூலத்துக்கு கடந்த 8-ம் தேதி காலை வழக்கம்போல அலுவலர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, சார் நிலை கருவூல கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கரின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. லாக்கரை உடைக்க முடியாததால், பணம் தப்பியது. இதுதொடர்பாக சார் நிலை கருவூலர் மீனாட்சி, பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (37), பூபாலன் (35) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பூபாலனின் அண்ணன் ரவிச்சந்திரன் (37) மங்கலம் காவல்நிலையத்தில் காவலராக கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்ததும், அதற்கு முன்பு பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது. இவரின் திட்டப்படியே செந்தில்குமாரும், பூபாலனும் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, தெரியவந்தது.

இதையடுத்து மங்கலம் காவல்நிலையத்தில் வேலைக்கு செல்லாமல் கடந்த சில நாட்களாக ரவிச்சந்திரன் தலைமறைவானார். இதையடுத்து ரவிச்சந்திரனின் மீது கூட்டுச்சதி, கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது உட்பட 5 பிரிவுகளின் கீழ் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், மங்கலம் காவலர் ரவிச்சந்திரனை பணியிடைநீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாய் சாய் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT