மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி-யுடன் இணைந்து நெய்வேலியில் புதிய அரசு ஐடிஐ தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 4 தொழிற்படிப்புகளுடன் இந்த ஆண்டே அது தொடங்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் முதன்மைச் செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
கடலூர் மாவட்டம் நெய்வேலி யில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி) இணைந்து புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) அமைக்கப்படும் என்று நிதி மற்றும் பணியாளர் மேலாண் துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பின் பேரில் நெய்வேலியில் அரசு ஐடிஐ ஏற்படுத்துவது தொடர்பாக என்எல்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருக்கு அரசு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து, நெய்வே லியில் 4 தொழிற்பயிற்சி பாடங் களுடன் ஐடிஐ அமைப்பது தொடர்பாக வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அக்கருத்துருவை ஏற்று நெய்வேலியில் என்எல்சி-யுடன் இணைந்து அரசு ஐடிஐ தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பணியாளர் ஊதியம் மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ. 1 கோடியே 35 லட்சத்துக்கு நிதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மென்திறன் பயிற்றுநரை நியமிக்கவும், இந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி படிப்புகள் தொடங்கவும் வேலை வாய்ப்பு பயிற்சி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.