கொளத்தூர், திருவிக நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜவஹர் நகர், பெரவள்ளூர், திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதோடு, வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்துவரும் மழையால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும், ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பாலப் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டார். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூர் சிவ இளங்கோ சாலை, பெரவள்ளூர் காவல் நிலையம் எதிரே உள்ள பகுதிகள், அசோகா அவென்யூ, ஜிகேஎம் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.