கனமழை காரணமாக சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணையிலிருந்து நேற்று முன்தினம் இரவுமுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஆனைக்குட்டம் அணையின் மொத்த உயரம் 7.50. மீட்டர். இந்நீர்த்தேக்கத்தால் ஆனைக் குட்டம் கிழத் திருத்தங்கல், வாடி, முத்துலிங்காபுரம் ஆகிய கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன.
நேற்று முன்தினம் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததை அடுத்து 4 ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையை ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி பார்வையிட்டார்.
நேற்று பிற்பகலில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நான்கு ஷட்டர்களில் 2 ஷட்டர்கள் அடைக்கப்பட்டன.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், தொடர் மழை காரணமாகவும் அணையின் பாதுகாப்பு கருதியும் ஷட்டர்களை முழுமையாக அடைக்கவில்லை. தற்போது 4.8 மீட்டர் உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.