TNadu

மருத்துவத் துறையில் பெண் குழந்தைகள் பிறப்பை தடுக்கிற - தொழில்நுட்பங்களை தடை செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 878 ஆக குறைந்திருப்பது தேசிய குடும்பநல கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகளை போற்றி வணங்கும் வழக்கம் கொண்ட தமிழகத்தில் அவர்களது பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைவது ஆரோக்கியமான அறிகுறி அல்ல.

செயற்கை கருத்தரிப்பு மூலம்பிறக்கும் குழந்தை ஆணாக இருப்பதை உறுதி செய்ய 12-க்கும்மேற்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ரத்தம் மூலமான மரபணு ஆய்வு மூலம் குழந்தைகளின் பாலினம் கண்டறியப்படுகிறது. இவை தடை செய்யப்படவில்லை என்பதால் பலரும் தங்களது குழந்தைக்கான பாலினத்தைதங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கின்றனர்.

பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிப்பது, ஆண் குழந்தைகளை மட்டும் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் உடனே தடை செய்யப்பட வேண்டும். இதில் சட்டவிரோதமாக செயல்படுவோர் தப்பிக்க முடியாதபடி கடும் தண்டனை வழங்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பள்ளி முதல் ஆராய்ச்சி வரை இலவசக் கல்வி, நிபந்தனையின்றி அனைவருக்கும் திருமண நிதியுதவி, பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.10 லட்சம் வைப்புத் தொகை உள்ளிட்ட ஊக்குவிப்புகள் அடங்கிய சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT