Regional01

ரயில்வே சரக்கு முனையம் ஈங்கூரில் அமைக்க நடவடிக்கை : சேலம் ரயில்வே கோட்ட பொதுமேலாளர் தகவல்

செய்திப்பிரிவு

ஈங்கூரில் ரயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என சேலம் ரயில்வே கோட்ட பொதுமேலாளர் கவுதம் சீனிவாஸ் தெரிவித்தார்.

ஈரோடு ரயில் நிலையத்தில், சேலம் ரயில்வே கோட்ட பொதுமேலாளர் கவுதம் சீனிவாஸ் மற்றும் ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி ஆகியோர் பயணிகள் பாதுகாப்பு, மேம்பாட்டு பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே பொதுமேலாளர் சீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு ரயில்நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுபாலத்தை விரிவுபடுத்துவது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேலம் - கோவை இடையே பயணிகள் ரயில் இயக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்து பரிசீலிக்கப்படும்.

மழைக்காலங்களில் ரயில்வே நுழைவு பாலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஈங்கூரில் ரயில்வே சரக்கு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT