Regional01

திருத்தணி, திருச்சி உள்ளிட்ட 5 மலைக்கோயில்களில் - ரோப்கார் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

திருத்தணி, திருச்சி உள்ளிட்ட 5 மலைக்கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக விரைவில் ரோப்கார் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகந்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ``பழனி முருகன் மலைக்கோயிலில் கேபிள் ரோப்கார் வசதி உள்ளது. அதேபோல தமிழகத்தில் உள்ள 33 மலைக்கோயில்களிலும் ரோப்கார் வசதி செய்து கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’' என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 5 மலைக்கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் வசதி விரைவில் செய்து தரப்பட உள்ளது. மற்ற கோயில்களில் மலைகள் சிறியது என்பதால் இந்த வசதிகள் செய்து கொடுப்பது கடினம்’’ என்றார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT