Regional01

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு - நவ.30-க்குள் மாற்று இடம் ஒதுக்கஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு :

செய்திப்பிரிவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடைகோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மருத்துவ ரீதியிலான ஆவணங்களை ஆய்வு செய்ய ஏதுவாக கூடுதலாக எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் 200 சதுர அடி அளவிலான இடத்தில்தான் ஆறுமுகசாமி ஆணையம் இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. உணவுக்கூடம் அளவுகூட இல்லாத இடத்தில் ஆணையம் இயங்குவது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே ஆறுமுகசாமி ஆணையத்துக்கு போதுமான இடவசதியுடன், அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய மாற்று இடத்தை வரும் நவ.30-ம் தேதிக்குள் தமிழக அரசு ஒதுக்க வேண்டும். ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஆணையத்தின் விசாரணையைத் தொடர அப்போலோ மருத்துவமனை கூடுதலாக வைக்கும் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக வழங்கினால் அதுதொடர்பாக பரிசீலிக்கப்படும்” எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் நவ.30-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT