Regional01

ஆளிப்பட்டி- மாகாளிபட்டி இடையே - சேறும், சகதியுமான சாலையால் மாணவர்கள் அவதி :

செய்திப்பிரிவு

மணப்பாறை அருகே சேறும், சகதியுமான சாலையால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆளிப்பட்டியிலிருந்து மாகாளிபட்டி செல்லும் சுமார் ஒரு கி.மீ தொலைவிலான சாலையின் ஒரு பகுதி தொப்பம்பட்டி ஊராட்சியிலும், மற்றொரு பகுதி மணப்பாறை நகராட்சியிலும் வருகிறது. இதில், நகராட்சிக்குட்பட்ட சாலை, தற்போது பெய்து வரும் மழை காரணமாக சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இந்தச் சாலை வழியாக மணப்பாறை, மாகாளிபட்டி, தோகைமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வரும் ஆளிப்பட்டி, கரும்புளிபட்டி, குதிரைகுத்திப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், மாகாளிபட்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளதால், இந்த அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT