புதிய கிரிப்டோ கரன்சியை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிமுகம் செய்யவும் தனியார் கரன்சியை தடை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குத் தயாராக உள்ளது.
மெய்நிகர் கரன்சி எனப்படும் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால் இதை முறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து இது தொடர்பான புதிய மசோதாவை தயார் செய்துள்ளது.
கிரிப்டோ கரன்சி மற்றும் முறைப்படுத்தல் மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா 2021,என பெயரிடப்பட்டுள்ள இந்தமசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு தயாராக உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதன்படி, ரிசர்வ் வங்கி பிரத்யேகமாக கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்யும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சோதனை ரீதியில்டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கிவிரைவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. அத்துடன் அனைத்துதனியார் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையும் தடை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் அதன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் குறிப்பிட்டவர்த்தகத்துக்கு அனுமதிப்பதுஎன்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மக்களவை செய்திக்குறிப்பில் இம்மசோதா தாக்கலாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்களவையின் அலுவல் நேரத்திலும் இது இடம்பெற்றுள்ளது.
இந்த மசோதா குறித்த விவரம் எதுவும் பொது தளத்தில் வெளியிடப்படவில்லை. அத்துடன் இது தொடர்பாக பொது மக்களிடம் கருத்துகளும் கேட்கப்படவில்லை.
கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து விரிவான விளம்பரங்கள் வெளியாகின்றன. இதில் பலரும் முதலீடு செய்து அதிக நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு யாரை பொறுப்பாக்குவது என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இம்மாதம் 13-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். முறையற்ற கிரிப்டோ கரன்சி வர்த்தகம் அந்நியச் செலாவணி மோசடிக்கும், தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கும் பயன்படும் என்று கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இது குறித்து தீவிரமான உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்ற கருத்தும் வெளியிடப்பட்டது.
கடந்த வாரம் நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழு, கிரிப்டோ கரன்சி குறித்து இத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது கிரிப்டோ வர்த்தகம் தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டது. அத்துடன் இந்த வர்த்தகத்தை முறைப்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.- பிடிஐ