சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னைக் குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் 1,000 மில்லியன் லிட்டர் குடிநீரில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.
குடிநீரின் தரம் குறித்து தினமும் 300 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பருவமழை காரணமாக தினமும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. நவ.23-ம் தேதி வரை 8,929 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடு்க்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைபெறும்.
மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அங்குள்ள மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகக்கூடிய குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 15 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கத் திட்டமிட்டு, இதுவரை 7.25 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
அதன்படி மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல்இருக்க குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீரில் கலந்து 2 மணி நேரம் கழித்துப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பருவமழைக் காலங்களில் குடிநீரைக் காய்ச்சிப் பயன்படுத்தவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். உரிய இடைவெளியில் சீரான முறையில் குடிநீர் விநியோகிப்பதால், மக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரைச் சேமித்து வைக்க வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.