சின்னசேலம் வட்டம் நைனார்பாளையம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனது நிலத்தை அளப்பதற்காக நைனார்பாளையம் கிராம உதவியாளரான சுசீலாவை அணுகியுள்ளார். அவர்,சின்னசேலம் குறுவட்ட நில அளவையர் சூர்யாவை அணுகி நிலத்தை அளப்பதற்காக ரூ.24 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி தேவநாதன், ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் போலீஸார் வழிகாட்டுதல் படி ஜெயராமன் நேற்று, நில அளவையர் சூர்யா மற்றும் கிராம உதவியாளர் சுசீலாவிடம் பணத்தை அளித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து, சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பெண் அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.