அண்ணா பல்கலைக்கழக நூலகத் துறை சார்பில் பொறியியல், தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும்விதமாக கடந்த 14 ஆண்டுகளாக புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 2 நாள் புத்தகக்காட்சி, சென்னை கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று தொடங்கியது.
புத்தகக்காட்சியை துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தொடக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புத்தகக்காட்சி காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக பங்கேற்கலாம். இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஓரிரு வாரங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். தமிழ்வழியில் பொறியியல் படிப்பதன் மூலம் பாடக் கருத்துகளை மாணவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியும். இது எதிர்காலத்தில் சிறந்த தொழில் நிபுணர்களாக வருவதற்கு வழிவகை செய்யும். ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழியில்தான் பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளை படிக்கின்றனர். எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்.
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் பயிலும் மாணவர்கள், பருவத்தேர்வு முடிவுகளில் மறுமதிப்பீடு செய்ய ஒரு பாடத்துக்கு ரூ.700 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சிறப்புக் குழு அமைத்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். அதேபோல், மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் வகையில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளர் ஜி.ரவிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.