பொதுப்பணித்துறையில் சென்னை, திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் உள்ள அலுவலகங்களை மறுசீரமைப்பு செய்து, கோவையைதலைமையிடமாக கொண்டு புதியமண்டலம் உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள் ளது.
இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித் துறை கட்டிட அமைப்பில் சென்னை,திருச்சி, மதுரை ஆகிய 3 மண்டல அலுவலகங்களின் கீழ் 12 வட்ட அலுவலகங்கள், 56 கோட்ட அலுவலகங்கள், அதை சார்ந்த உபகோட்ட மற்றும் பிரிவு அலுவலகங்கள் ஆகியவை பொதுப்பணித் துறையின் கீழ் தற்போது இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவை யில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதிபொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், ‘‘சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை மறுசீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு ஒரு கூடுதல் மண்டலம் உருவாக்கப்படும்’’ என்று அமைச்சர் அறிவித்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலஅலுவலகம் உட்பட 4 மண்டலங்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு குறித்து முதன்மை தலைமை பொறியாளர் பரிந்துரை அளித்தார்.
அதன்படி, சென்னை மண்டலத் தின் கீழ் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும்விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களும், திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களும் வருகின்றன.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய9 மாவட்டங்கள் கோவை மண்டலத்திலும், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்கள் மதுரை மண்டலத்திலும் வருகின்றன.
இதையடுத்து, கோயம்புத்தூர் மண்டலம், வட்டம், கோட்டம், உப கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகங்கள் தொடர்பாக புதிய அலுவலங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன. இதுதவிர புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.