சென்னையில் நேற்று பெய்த கனமழையால் தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய நீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். (அடுத்த படம்) தி.நகர் விஜயராகவா சாலையில் தேங்கியிருந்த மழை நீர். படங்கள்: க.பரத் 
Regional01

சென்னையில் திடீர் மழையால் - வெள்ளத்தில் மிதந்த தியாகராய நகர் : முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று காலை பெய்த திடீர் மழையால் தியாகராய நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மாநகரின் முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாநகரின் பல பகுதிகளில் நேற்று காலை திடீரென மழை பெய்தது. பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் பெற்றோர் தவித்தனர்.

மேலும், நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தியாகராய நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் வெளியேறியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக, வடக்கு உஸ்மான் சாலை, பசுல்லா சாலை, ஜி.என்.செட்டி சாலை, திருமலை சாலை, டாக்டர் நாயர் சாலை, ராகவய்யா சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. இதனால், அங்கு சென்ற பல வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் பழுதாகி நின்றன.

தியாகராய நகரின் பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. அதேபோல, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பணிக்குச் செல்வோர், மாணவர்கள் அவதிக்குள்ளாயினர்.

மாநகராட்சி நிர்வாகம் ராட்சத இயந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பசுல்லா சாலை பகுதி மக்கள் கூறும்போது ``காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட வெளியில் செல்ல முடியாமல் தவிக்கிறோம். இப்பகுதியில் கழிவுநீரை முழுமையாக அகற்றும் முன்னரே, மழை வந்துவிட்டது.

மீண்டும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, அடுத்த சில தினங்களில் மேலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது'' என்றனர்.

பெரும்பாலான பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் வெளியேறியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

SCROLL FOR NEXT