பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரபணு பரிசோதனையை மட்டுமே சாதகமான ஆதாரமாக காட்டி தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்ப முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த 2010-ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூக்கன் என்ற முருகனை விராலிமலை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து, முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து முருகன் செய்த மேல்முறையீடு வழக்கில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முருகன் மேல்முறையீடு செய்தார். உச்சநீதி மன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பீலா திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
‘‘இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட மரபணு பரிசோதனைகளில் தனக்கு எதிராக எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘மரபணு (டி.என்.ஏ) பரிசோதனை மட்டும் சாதகமாக இருப்பதாகக்கூறி, அதை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகள் தப்ப முடியாது. ஏனென்றால், சிறுமிக்கு ஏற்பட்ட காயங்கள் அதுகுறித்த மருத்துவ அறிக்கைகள், சாட்சியங்கள் ஆகியவை குற்றவாளிக்கு எதிராகவும், வலுவாகவும் இருக்கின்றன. எனவே, இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் முருகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.