திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அதில், தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அடுத்த கொல்ல கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சென்று, வர பொதுவழி இல்லை. அங்கநாத வலசையில் இருந்து குரும்பேரி செல்ல வேண்டும் என்றால், பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை. எனவே, பொதுவழி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கூட்டத்தில், திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.