பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் தனியார் பள்ளி மாணவி, பாலியல் வன்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது.
கடந்த 12-ம் தேதி கோவை தனியார் பள்ளி மாணவி, ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இதுமட்டுமின்றி, திண்டுக்கல் தனியார் செவிலியர் கல்லூரியில் மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
பாலியல் சீண்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தவறு. இது இத்தகைய குற்றங்களை தடுக்க உதவாது. பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீண்டும், மீண்டும்அதை செய்வதற்கான துணிச்சலையே தரும். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான துணிச்சலை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கப்படுவதை தடுத்தல், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்கு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குதல், குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர சட்ட உதவிகளை பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய விரிவான செயல்திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதற்காக வல்லுநர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில், ‘ மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்குக்காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான்.குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நீதி வழங்குவதில்தான் தாமதம் ஏற்படுகிறது. அதிகபட்சமாக இரு மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.