உதகை லோயர் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை கொடுத்துவிட்டு, மது கொடுக்குமாறு ஊழியர்களிடம் ஒருவர் தகராறு செய்துள்ளார். தகவலின்பேரில் அங்குவந்த போலீஸார், தொடர்புடைய நபரை பிடித்து விசாரித்ததில், அவர் கோவையை சேர்ந்ததீனதயாளன் (32) என்பதும், புதுச்சேரி பகுதியை சேர்ந்த கோபிநாத் (25) என்பவருடன் தலைகுந்தாவில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. காந்தல் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (28) என்பவர் இவர்கள் மூலம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டை சோதனை செய்ததில் 47 எண்ணிக்கையிலான ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23,500 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.