பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மணலி புதுநகர் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லத் தொடங்கினர்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 19-ம் தேதி இரவு, சென்னை மணலி புதுநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மீட்கப்பட்டு 3 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் செல்லும் நீரின் அளவு குறைந்து, குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த நீர் வடியத் தொடங்கியுள்ளது. அதனால் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 672 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். தற்போது வெள்ளநீர் வடியத் தொடங்கிய நிலையில் 81 பேர் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது முகாம்களில் 591 பேர் தங்கியுள்ளனர். வெள்ளநீர் வடிந்த பிறகு, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை, நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.