Regional02

ஏற்காட்டில் மாநில கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்க - கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து : கொடைக்கானலில் அமைக்கவுள்ளதாக அரசு தரப்பில் தகவல்

செய்திப்பிரிவு

ஏற்காட்டில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக் கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு, கொடைக்கானலில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் ஆராய்ச்சி, பயிற்சி மையம் அமைக்கும் வகையில் புதிதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா மஞ்சக்குட்டை பஞ்சாயத்தில் உள்ள செம்மடுவு என்ற இடத்தில் 4.33 ஏக்கர் பரப்பில் மாநில அளவில் கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்க கடந்த 24.12.20 அன்று கூட்டுறவுத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக ஏற்காட்டில் மாநில கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கான கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது கூட்டுறவுத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஏ.செல்வேந்திரன், ஏற்காட்டில் மாநில கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்க கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேசிய அளவில் கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் ஆராய்ச்சி, பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது எனக்கூறி கடந்த 9.11.21 அன்று புதிதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சமர்ப்பித்தார்.

அதில், ஏற்கெனவே சென்னை, மதுரை, சேலத்தில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த சூழலில் கூட்டுறவு சங்கங்களின் சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் கொடைக்கானலில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் ஆராய்ச்சி பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. கொடைக் கானல் தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள மலைப்பிரதேசம் என்பதால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் எளிதாக இருக்கும். எனவே ஏற்காட்டில் மாநில அளவிலான பயிற்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டு, அங்கு ஒதுக்கப்பட்ட 4.33 ஏக்கர் நிலம் மலைவாழ் மக்கள் பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் மலைவாழ் மக்களின் விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட விளை பொருட்களாக மாற்றி விற்பனை செய்யவும், அவர்களின் வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் மேம்படவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன் கடும் ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், ஏற்காட்டில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்க நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் பெறப்பட்டு அதிக பொருட்செலவில் பணிகளும் தொடங்கப்பட்டு வி்ட்டது. தற்போது அதை ரத்து செய்து கொடைக்கானலுக்கு மாற்றுவது என்பது அரசியல் ரீதியாக உள்நோக்கமுடையது. தற்போது ஏற்காட்டில் கட்டப்பட்ட கட்டுமானங்களின் தற்போதைய நிலை என்ன, எவ்வளவு பணம் இதுவரை செலவழி்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட வேண்டும், என கோரினார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் நவ.24-க்கு தள்ளி வைத்து, அதற்குள் ஏற்காடு பயிற்சி மையம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT