விருதுநகரில் இயங்கிவரும் விருதை சிறுதானிய விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அதன் பங்குதாரர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விருதை சிறு தானிய விவசாய உற்பத்தி யாளர் நிறுவனத்தின் பங்கு தாரர்களான சின்னப்பரெட்டிய பட்டியைச் சேர்ந்த மணிராஜ், சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனு வில் கூறியிருப்பதாவது:
விருதை சிறுதானிய விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் 10.6.2016-ல் தொடங்கப்பட்டது. ஆயிரம் விவசாயிகள் இணைந்து தலா ஆயிரம் ரூபாய் பங்குத் தொகையாக பெறப்பட்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்நிறுவனம் தனியார் நிதி நிறுவனம் மற்றும் வங்கிகள் மூலம் ரூ.18.66 கோடி கடன் பெற் றுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்நிறுவனத்தில் இதுவரை ஒருமுறை கூட முறை யான ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை.
எங்களது பகுதியில் உள்ள பங்குதாரர்கள் 40 பேருக்கும் இதுவரை பங்குத் தொகைக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. பங்குதாரர்கள் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து இயக்குநர்கள் தேர்வு செய்யப்படாமல் முறை கேடாக இயக்குநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் ஆண்டு வரவு-செலவு அறிக்கை உண்மைக்குப் புறம்பாக தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இவற்றை முறையாக கண் காணித்து சரிசெய்யாத வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநர் மற்றும் இதர அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.